வெளி நாடுகளில் தொழில்புரியும் காலத்தில் விபத்துக்களில் உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடாக வழங்க 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிகையில் விபத்துக்களின்போது உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வெளிநாடுகளில் தொழில்புரியச் சென்று அங்கு விபத்துக்குள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது இலகுவான விடயமல்ல. இந்நிலையில் இலங்கையர்களுக்கு இந்தளவு பாரிய நஷ்டஈட்டுத் தொகையை வழங்கக் கிடைத்தமை கடந்த மூன்று வருடங்களில் வெளிவிவகார அமைச்சு ஈட்டிய பாரிய வெற்றியாகும்.
வெளிநாடுகளில் தொழில் புரியும்போது விபத்துக்களில் சிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. அவ்வாறே அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் காலத்தில் விபத்துக்களில் உயிரிழந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 45 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையாக வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.