புது மாத்தளனில் இறுதி வெடிச் சத்தம் பயங்கரவாத ஒழிப்பின் வெற்றியை நிர்ணயித்தது போல சிறந்த அரச துறையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த முதல் வெற்றியே நான்கு மாவட்டச் செயலகங்களுக்கும் கிடைத்த சர்வதேசத் தரச் சான்றிதழென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐ. எஸ். ஓ- 9001 சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ள கண்டி, குருநாகல், மாத்தறை, காலி மாவட்டச் செயலகங்கள் சார்பில் அம் மாவட்டச் செயலர்களை வாழ்த்தி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றதுடன் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
கடந்த காலங்களில் அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி அரசாங்கத்திடமும் மறுபகுதி பிரபாகரனிடமும் இருந்தது. இங்கு வந்தால் எமது அரச அதிகாரியாகச் செயற்படுபவர்கள் அங்கு சென்று பிரபாகரனின் வழி நடத்தலைச் செயற்படுத்துவோராக இருந்த காலம் ஒன்றிருந்தது.
அந்நிலைக்கு தற்போது முடிவுகட்டப்பட்டுள்ளதுடன் முழுநாட்டிலும் அரச நிர்வாகம் அரசாங்கத்திடமே தற்போதுள்ளது. அரச சேவையை மட்டுப்படுத்தி அரச துறைகளைத் தனியாருக்கு வழங்கிய கடந்த கால ஆட்சியாளர்களின் அரச துறையை வீழ்ச்சியடையச் செய்வதிலேயே கருத்தாகச் செயற்பட்டனர்.
நாம் நாட்டைப் பற்றி புதிதாகச் சிந்தித்ததன் பிரதிபலனே இந்த சர்வதேச தரச்சான்றிதழ். கடந்த காலங்களில் எமது நாட்டைச் சிலர் தோல்வியுற்ற நாடாக வர்ணித்தனர். இதற்குக் காரணம் வெல்ல முடியாத யுத்தமும் ஒழுங்கற்ற அரச சேவையும் தான்.
இன்று நாடு பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகண்டு இரண்டாவது நடையான அரச துறை வீழ்ச்சியையும் வெற்றிகொண்டு சர்வதேச சான்றிதழ் பெறும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அன்று யுத்தம் புரிந்த அதே படையினரே எமது தலைமைத்துவத்தின் கீழும் யுத்தம் புரிந்தனர்.
எனினும் அன்று தலைமைத்துவம் வழங்கியவர்கள் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவருடன் கைகோர்த்துச் செயற்பட்டவர்கள். நாமோ பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி அதனை வெற்றிகொண்டுள்ளோம்.
தலைமைத்துவம் வழங்கும் நாம் முன்னேறிச் செல்லும்படி பணித்தால் படையினர் முன்னேறிச் செல்வார்கள். நாம் பின்னே வரச்சொன்னால் பின்னடைவே கிட்டும். இதற்கான பொறுப்பு தலைமைத்துவத்திடமே உள்ளது. யுத்தத்தை வென்றமை போன்றே நாம் சிறந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதிலும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறோம். அரச ஊழியர்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குதல் அவசியம்.
12 லட்சத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் பொது மக்களின் வரியிலிருந்தே வழங்கப்படுகிறது. அதனால் கண்ணீருடன், பிரச்சினைகளுடன் வரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டியது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். இந்த சவாலை வெல்வது அவசியம்.
இத்தகைய சர்வதேச தரச் சான்றிதழ்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். அவர்கள் தமது வர்த்தகத்தின் இலாப நோக்கம் கருதியே அதனைச் செய்வர். அரச துறையினருக்கோ எல்லா நிலையிலும் குறைவில்லாமல் சம்பளம் கிடைக்கிறது.
அவர்கள் விரும்பினால் மக்களுக்கு நல்லதைச் செய்யலாம் விரும்பாவிட்டால் எதையும் செய்யலாம். எனினும் இன்று நல்லதைச் செய்கின்ற மனதுடன் அரச ஊழியர்கள் செயற்படும் காலம் உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.