மட்டக் களப்பு மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் திடீரென நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கிய நோயாளர்களையும் ஊழியர்களையும் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.
நேற்றுக்காலை 6.00 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் ஐந்து மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் தீயை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புக்களோ பாரிய சேதகங்களோ ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையினர் துரிதமாக செயற்பட்டதை அடுத்து பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட 13 பேரும் மட்டக்களப்பு விமானப்படைத் தளத்தில் உள்ள வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தீவிபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலை பிரதேசத்தில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளது.
வைத்தியசாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீற்றர் தொலைவில் மட்டு. விமானப் படைத் தளம் அமைந்துள்ளதால் தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்த அவர்கள் தீ ஏனைய பிரதேசங்களுக்குப் பரவுவதற்கு முன்னர் விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மட்டு. விமானப் படை அதிகாரி விங்.கொமாண்டர் ரி. டி. ஏ. ஹெரிசன் தலைமையிலான குழுவினர் படகுகளை பயன்படுத்தி 13 பேரை உடனடியாக மீட்டெடுத்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியசாலையின் கட்டடத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டிய அவர் தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மாந்தீவு தொழு நோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் இவ்வைத்தியசாலைக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லையென பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விமானப் படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ ஊழியர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், வைத்தியசாலையின் அதிகாரிகள் இவ்வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
இவ்வைத்தியசாலையின் கட்டடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் இவ்வைத்தியசாலையைச் சுற்றி படர்ந்திருந்த பற்றைகள், புற்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் வைத்தியசாலைக்குள் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இங்கிருந்து நோயாளர்கள் விமானப் படை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மட்டு. மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை விமானப்படை ஹெலிகொப்டர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்க}