பாராளு மன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளுக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேற்படி சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவ்வாறே நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையை பெறவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் சபாநாயகர் நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்படி உயர் நீதிமன்ற தீர்ப்பை சபையில் அறிவித்தார்.
சபையின் அங்கீகாரத்திற்கென பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக அரசியலமைப்பின் 121 (1) பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), ஐ. தே. க என்பன மேற்படி சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தன. மேற்படி மனுக்கள் தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் 2ஆம் வாசகத்தின் 7(5) ஆ உப பிரிவு 7(6) உப பிரிவில் அல்லது ஏதேனும் மதத்தை அல்லது சமுதாயத்தை குறித்துக்காட்டுவதாயின் எனும் சொற்கள் மற்றும் 4 ஆம் வாசகத்தின் 9 (3) உப பிரிவு ஆகியவை அரசியலமைப்பின் 12 (1) , 14(1) அ. மற்றும் 14 (1)(உ) ஆகிய உறுப்புரைகளுக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் உள்ளவாறே நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் விசேட பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் என அரசியலமைப்பின் 123 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவ்வாறே 2 ஆம் பிரிவின் 7 (5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திருத்தியமைக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 2 ஆம் பிரிவின் 7(5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் தவிர்ந்த சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும் உயர் நீதிமன்றம் மேலும் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தெரிவித்தார்.