695 ரயில் கடவைகளை திருத்த அரசு நடவடிக்கை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி – அமைச்சர் லசந்த

26parliament.jpgஇந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 695 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும் திருத்தி இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பியொருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள ஐம்பது வீத பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பணிகள் தடைப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரிந்தோர் தமக்கான சம்பளம் போதாது என்ற நிலையில் சுயவிருப்பத்தின் பேரில் தொழிலிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு மீண்டும் இதே ரயில் கடவைகளை இயங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஜே. வி. பி. எம்.பி. லக்ஷ்மன் நிபுணஆரச்சி கேள்வியொன்றை எழுப்பினார்.

அவர் தமது கேள்வியின் போது, ரயில் பாதைகளுக்குக் குறுக்காகச் செல்லும் பல பாதைகளில் புகையிரதத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சமுர்த்தி அதிகார சபையுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் சமுர்த்தி அதிகார சபையுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இறுதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *