ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உயர் அதிகாரியும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளருமான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அரசின் இறுதி முடிவுக்கு பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு இந்த இறுதி முடிவு குறித்துத் தனக்கு அறிவித்ததாக யுனிசெப் அமைப்பின் தென்னாசியாவுக்கான பேச்சாளர் சர கிறோவ், சி.என்.என். செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையின் இந்த அறிவிப்பால் யுனிசெப் அமைப்பு ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் பெமெமன் தெரிவித்துள்ளார். “ஜேம்ஸ் எல்டர் வெளியிட்ட அறிக்கை புலிகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது. ஜேம்ஸ் எல்டர் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை” என அவர் மீது அரசு குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து பான் கீ மூன் விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பாரிய சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.