மர்மயோகி படத்துக்காக தங்களிடம் முன் பணமாகப் பெற்ற ரூ 10.90 கோடியை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என பிரமிட் சாய்மிரா நிறுவனம் நடிகர் கமல்ஹாஸனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் சிதம்பரம் அனுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பிரமீட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து மர்மயோகி எனும் படத்தை பிரமாண்ட முறையில் தயாரிக்க முடிவு செய்தனர். கமல் இயக்கி நடிப்பதாக இருந்த அந்தப் படம் பொருளாதார நெருக்கடி காரணமாக தள்ளிப் போடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்துக்காக கமல்ஹாஸனுக்கு ரூ.10 கோடியே 90 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டிருந்தது. மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், கமல் தனது சொந்தப் படமான உன்னைப் போல் ஒருவன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்போது அந்தப் படம் வெளியாகும் நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் கமல்ஹாஸனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘மர்மயோகி’ படத்தை எடுத்து முடிக்காமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை வெளியிடுவது சரியல்ல. ‘மர்மயோகி’ படத்திற்கான பணிகளை துவக்காததால் முன்பணமாக பெற்ற தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். எனவே உடனடியாக முன்பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தேவையற்ற செலவீனங்களை தவிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறோம்…”, என்று கூறப்பட்டுள்ளது.
\