ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் தொடர்வதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள். இதுவரை 160 விமானங்களின் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்கலில் தவிக்கிறார்கள்.
ஏர் இந்தியா மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்கி நிலைமையைச் சமாளித்து வருகின்றன. கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 2 பைலட்டுகளை வேலையிலிருந்து நீக்கியது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு முழுவதுமுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் 600பேர் திடீரென மாஸ் லீவ் எடுத்தனர்.
இதனால் 160 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உடல் நிலையை காரணம் கூறி விடுப்பில் போன பைலட்டுகளை ஜெட் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் 8 பைலட்டுகள் சொன்ன காரணம் உண்மையில்லை என்று அறிந்த நிர்வாகம் 8பேரையும் பணி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இதோடு சேர்த்து இதுவரை 10 பைலட்டுகள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று பைலட்டுகள் காத்திருந்த நிலையில் நிர்வாகம் மேலும் 8 பைலட்டுகளை பணிநீக்கம் செய்தது மற்ற பைலட்டுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பயணிகள் சேவை பாதிக்கப்படுவதினால் பைலட்டுகளை மீண்டும் வேலைக்கு திரும்பவைக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.ஆனால் பேச்சுவார்த்தை இப்போதைக்கு தொடங்குவதாகத் தெரியவில்லை.