அலுத்கமை மற்றும் இந்துருவைக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுதினமான ஞயிறு மாலை 5.00 மணி வரை இந்த ரயில் சேவைகள் தடைப்பட்டிரக்கும்.
பெந்தோட்டை ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கான காரணமாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதன்படி மருதானை ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 6.45 க்கு காலி நோக்கி புறப்படும் ரயில் சேவை மற்றும் பிற்பகல் 1.40 மற்றும் மாலை 5.50 ஆகிய நேரங்களில் மாத்தறை நோக்கிப் புறப்படும் ரயில் சேவைகள் இடம்பெற மாட்டாது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் புறப்படும் கடுகதி ரயில் சேவையும் இடம்பெற மாட்டாது. இதேவேளை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் 8050 இலக்கம் கொண்ட ரயில் சேவை சனிக்கிழமை அலுத்கமை வரை மட்டுமே இடம்பெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.