பல்கலைக் கழகங்களுக்குள் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களுடன் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அரசியல்வாதிகள் அங்கு கூத்தாடுவதற்கு இடமளிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் செவ்வாய்க்கிழமை சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அகிலவிராஜ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதிலும் இயங்குகின்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படுகின்ற பாடநெறிகளில் 60 வீதமானவை எமது நாட்டுக்கும், எமது நாட்டு பொருளாதார நன்மைகளுக்கும் அபிவிருத்திக்கும் பொருத்தமானதாக அமையவில்லை. இத்தகைய பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது உயர் கல்வி அமைச்சின் பொறுப்பாகும். மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் பாரிய வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. கணினிப் பற்றாக்குறை அதற்கான விரிவுரையாளர்களின் குறைபாடுகள் என பல விடயங்கள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. இவ்விடயங்களில் அமைச்சு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.