யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வினை வழங்குதல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயத்தை விடுவித்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரட்ண ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
“யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பல துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது ஒரு தேசிய ரீதியான பிரச்சினை. எனவே இப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க உடனடியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆனால் அதற்கீடாக சம்பள உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. இந்த வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கேட்கும் 500 நாளாந்த சம்பளம் நியாயமானது. குறைந்த பட்சம் 15,000 ரூபாவையாவது அடிப்படை சம்பளமாக அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இன்று பலர் பயங்வாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். அண்மையில் கூட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவருக்குக் கடூழியச் சிறையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் ஓர் ஊடகவியலாளர். ஊடகவியலாளர் ஒருவருக்குத் தனது கருத்தையும், உண்மை நிலையை எடுத்துக் கூறும் உரிமையும் உள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பலர் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எனவே அச்சட்டத்தை அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.