இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியதால் தனது பந்துவீச்சுத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரெட்லீ அளித்துள்ள மின்னஞ்சல் பேட்டியில், இருபது-20 போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடிய போட்டி என்றாலும், இதில் விளையாடியதால் எனது பந்துவீச்சுத் திறன் மேம்ப்பட்டுள்ளது.
யார்க்கர், ஸ்லோ பால் மற்றும் ஸ்லோ-பாலில் பவுண்சர் வீசுவது உள்ளிட்டவை தற்போது எனக்கு அத்துபடியாகி விட்டது. இதேபோல் இருபது ஓவர் போட்டிகளில் பேட் செய்யும் போது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக பிரெட்லீ தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடுவதற்காக பிரெட்லீ இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.