இலங் கையில் ஐக்கிய நாடுகளின் சிறார்கள் நல அமைப்பான யூனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு கூறியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் விமர்சித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வந்தார் என்று இலங்கை அரசு அவர் மீது குற்றம் சாட்டுகிறது. இலங்கையில் போர் நடைபெற்ற நேரத்தில் அதில் சிக்கிய சிறார்களின் நிலைமை தொடர்பில், தொடர்ந்து ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தகவல்களை வழங்கி வந்தார்.
இலங்கையில் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினர் செய்து வரும் பணிகள் குறித்தும் ஐ நா வின் தலைமைச் செயலர் தனது முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் என்று ஐ நா வின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.