ஐ. தே. க. தலைவரின் கடந்த காலச் செயற்பாடுகள் காரணமாக அவர் தென் பகுதியின் எதிரியாகவே தென் பகுதி மக்களால் கருதப்படுகிறார். இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் மோசமான முறையில் நிராகரிக்கப்படுவாரென அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- 1988-89 காலப் பகுதியில் தென் பகுதி இளைஞர்கள் கூட்டாக கொல்லப் பட்ட சம்பவங்களுக்கும் பட்டலத்த வதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்க மீதே குற்றஞ் சுமத்தப்படுகிறது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் உமா ஓயா திட்டம் என்பவற்றை நிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது 30 வருட அரசியல் வாழ்வில் அவர் எடுத்த முடிவுகள் காரணமாக, ரணில் விக்கிரமசிங்க தெற்கின் விரோதியாக கருதப்படுகிறார்.
1988-89 கால கூட்டுக் கொலைகள், பட்டலந்த வதை முகாம் என்பன காரணமாக பல்லாயிரம் தென் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த கால வடுக்களை தென் பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஊவா தேர்தலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறை முகம் மற்றும் விமான நிலையத்தையும் உமா ஓயா திட்டத்தையும் நிறுத்துவதாக கூறியதை தென் பகுதி மக்கள் மறக்க வில்லை. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.
தென் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தென் பகுதி மக்களின் அபிமானத்துக்குரிய அவரை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.
அவருக்கு பாதிப்பு ஏற்படுவதை தென் பகுதி மக்கள் விரும்பவில்லை. எனவே இந்தத் தேர்தலில் தென் பகுதி வரலாற்றில் ஒருபோதுமில்லாத பெரு வெற்றியை ஐ.ம.சு.மு. பெறும். ஐ.தே.க. வின் தலைமைத்துவம் காரண மாக பெருமளவு ஐ.தே.க. பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அணி அணியாக அரசுடன் இணைந்து வருகின்றனர்.