இனப் பிரச்சினைக்கான அனைத்துக் கட்சித் தெரிவுக்குழுவின் தலைவரும் விஞ்ஞான, தொழில் நுட்பத்துறை அமைச்சருமான திஸ்ஸ விதாரண இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். இன்று காலை 9.30 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளும் அமைச்சர் பின்னர் பிரதேச செயலகங்களுக்குச் செல்வார். யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப வள நிலையங்களை அமைச்சர் பார்வையிடுவார்.
மாலை 5.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் அதிகாரப்பகிர்வு: இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்னும் பொருளில் உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நாளை காலை கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப வள நிலையத்தைத் திறந்து வைப்பார்.