ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் – ராகுல் காந்தி.

100909-rahul.jpgதமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது. இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு  செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • DEMOCRACY
    DEMOCRACY

    “சரியாக சொன்ன மச்சான்!”,நீ நீடூடி வாழ்க!!.

    Reply