தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.
பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.
இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.
உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.
இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.
நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.
எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.
நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.
உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல் வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது