பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்க அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியாவை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பாறை ஒன்றில் சிவப்பு பெயின்டினால் சீன எழுத்துக்களை எழுதிவிட்டு சென்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்தி வெளியாயின.
ஆனால் சீனாவும், இந்தியாவும் இதனை மறுத்திருந்தன.
இந்நிலையில் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவுத்துறை அமைச்சக பேச்சாளர் ஜியங் யு – விடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையேயான உறவை பாதிக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றார்.
மேலும் இந்திய – சீன சிறப்பு பிரதிநிதிகளிடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பயனுள்ள எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுவதை பற்றி கேட்டபோது, இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு நியாயமான, நேர்மையான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை காண்பதற்கான பணிகளில் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறினார்