ஊடகவியலாளன் திஸ்ஸநாயகத்துக்கு இருபது வருட கடூழியச் சிறை. திஸ்ஸநாயகம் ஆங்கிலத்தில் எழுதித் தண்டனை பெற்றுக் கொண்டவர். அவருக்குத் தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம். புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான மோதலைப் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றியும் எழுதிய திஸ்ஸநாயகம் தமிழ்த்தேசியம் சம்பந்தமான சம்பவங்கள் பற்றியும் கருத்துக்களைச் சொன்னார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன் முதலாகத் தண்டிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்பதோடு பத்திரிகையில் எழுதிய கருத்துக்களுக்காகத் தண்டனை பெற்ற ஒரு தமிழன் அவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த |தீப்பொறி| என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.கே.அந்தனிசில் என்பவருக்கு யாழ் நீதிமன்றம் ஒன்றரை வருடச் சிறைத் தண்டனை வழங்கியது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றது. நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதே அந்தனிசில் மீதான குற்றச்சாட்டு. சாதாரண சட்டங்களின் கீழேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கிடையாது. 1979 இல்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
|நோர்த் ஈஸ்ரேண் மந்லி| (வடக்கு, கிழக்கு மாசிகை) என்ற சஞ்சிகையை வெளியிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டினார், இந்தச் சஞ்சிகைக்கு நிதி சேகரித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தார் அல்லது கொடுத்தார், அவசரகாலச் சட்ட விதிகளை மீறிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கினார், ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகம் இரகசிய புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமும் அவருக்கு எதிராகத் தண்டனை விதிப்பதற்குக் காரணமாக அமைந்தது என்று மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அம்மையார் விதித்த தீர்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் முஹமத் ராஸிக் என்பவர் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகத் திஸ்ஸநாயகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். திஸ்ஸநாயகம் தமிழிலும் தனது கைப்பட ஒப்புதல் வாக்குமூலம் எழுதியுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்குமிடையில் வழக்குத் தொடுநர்களுக்குத் தெரியாதவர்களோடு இணைந்து, திட்டமிட்டோ அல்லது இல்லாமலோ, குற்றச் செயலொன்றினைப் புரியும் பொதுவான நோக்குடன், ~நோர்த் ஈஸ்டர்ன் மந்லி|யை எழுதி, அச்சிட்டு அல்லது விநியோகித்து இனவாத உணர்வுகளை உசுப்பிவிடக் காரணமானார் என்றே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் தம்மை அடித்து மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்று நீதிமன்றங்களில் கூறுவது வழக்கம். ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுபவர்களும் தாம் அடித்தோ, மிரட்டியோ ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறவில்லையென்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தன்னிச்சையாகவே அதனை அளித்தார்களென்றும் நீதிமன்றங்களில் தெரிவிப்பது வழக்கம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்குத் தமிழில் சரளமாகப் பேசமுடியாதென்று கூறி ஆங்கிலத்திலேயே நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு யுத்தத்தின் விளைவாக அநாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியும் தான் எழுதியுள்ளாரென்றும், தனது அந்த ஆங்கிலக் கட்டுரைகள் வேறு சிலரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ராஸிக்கினால் சொல்லப்பட்டதைப் போன்று, தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோதே, முதல் தடவையாகத் தமிழில் எதையாவது எழுதினாரென்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்திருக்கிறார்.
பத்துப் பேரை வழக்குத் தொடுநர்கள் நீதிமன்றத்துக்குச் சாட்சிகளாக அழைத்திருக்கின்றனர். ரெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்த பிரியந்த மனோரட்ன என்பவர் சாட்சியமளிக்கையில், 021-2285179 என்ற இலக்கம் கொண்ட தொலைபேசி, கிளிநொச்சி வாசியான கே.ஞானகுமார் என்பவரின் பெயருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களுக்கிடையில் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்குத் திஸ்ஸநாயகம் 21 தடவைகள் அழைப்பெடுத்துப் பேசியுள்ளாரென்றும் சாட்சி கூறியுள்ளார். இதே தொலைபேசி இலக்கத்திலிருந்து திஸ்ஸநாயகத்துக்கு எட்டுத் தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருக்கின்றன என்று இன்னுமொரு சாட்சியான டயஸ் ஜயசுந்தர என்பவர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பில் வசித்து வந்தாலும் வட பகுதியுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு பபா என்று அழைக்கப்படும் ஒருவர் திஸ்ஸநாயகத்தின் செல்லிடத் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து, தான் கிளிநொச்சியிலிருந்து பேசுவதாகவும், அந்த அழைப்பைத் திஸ்ஸநாயகம் ஏற்றுக் கொண்டாரென்றும் வாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை திஸ்ஸநாயகம் ஏற்று கிளிநொச்சிக்குச் சென்றிருக்கிறார் என்பதும் வாதிகள் தரப்புக் குற்றச்சாட்டு. தாண்டிக்குளத்துக்குச் சென்ற திஸ்ஸநாயகம் பாரதி, வண.பிதா கருணாரத்தினம், பி.பாலகுமார், எஸ்.பி.தமிழ்ச்செல்வன், பால்ராஜ் ஆகியோரைச் சந்தித்தாரென்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் யுத்த வெற்றிகள் குறித்து பால்ராஜ், திஸ்ஸநாயகத்துக்குத் தெரிவித்தாரென்றும், மீண்டும் யுத்தம் தொடங்கினால் அதனை எதிர்கொள்ளத் தாம் தயாரென்றும் பால்ராஜ் கூறினாரெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கலாமென்று தமிழ்ச்செல்வன் சொன்னாரென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திஸ்ஸநாயகம் கொழும்புக்குத் திரும்பித் தான் கிளிநொச்சியில் கண்டவை பற்றித் தனது சஞ்சிகையில் எழுதினாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெப்ரவரியில் சென்று மல்லவன், கணேசானந்தன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் பபா, சஞ்சிகைக்குப் பணம் வழங்கினாரென்றும் அதனைத் திஸ்ஸநாயகம் மறுத்தாரென்றும் கூடக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்குமிடையில் தலா ஐம்பதாயிரம் ரூபாவை மூன்று தடவைகள் அனுப்பினாரென்றும், பின்னர் இது பிரச்சினைகளை ஏற்படுத்தலாமென்று கூறி அதனைப் பெறத் திஸ்ஸநாயகம் மறுப்புத் தெரிவித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1988ஆம் ஆண்டு ஜே.வி.பி.கிளர்ச்சிக் காலகட்டத்தில் காணாமல்போன பிள்ளைகள் சம்பந்தமான பெற்றோர்கள் சங்கத்துடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் திஸ்ஸநாயகம் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இனவாதத்தைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்றும் வாசுதேவ நாணயக்காரா திட்டவட்டமாகவே தெரிவித்திருந்தார். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் மகளும் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பீ. சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியுமான மனோரி முத்தட்டுவேகம, இடதுசாரியான வண. பத்தேகம சமித தேரர் ஆகியோர் பல உதாரணங்களை முன்வைத்து, திஸ்ஸநாயகம் இன உணர்வுகளைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்று தமது சாட்சியங்களில் தெரிவித்திருக்கின்றனர்.
~வாசுதேவ நாணயக்காரா, மனோரி முத்தெட்டுவேகம, வண பத்தேகம சமித தேரர் ஆகியோர் ஒரே அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள். ஆதலால் இவர்களின் கருத்தினைப் பொதுமக்களின் கருத்தென ஈடுசெய்ய முடியாது. எனவே அவர்களின் புரிந்துணர்வு, பொதுமக்களின் புரிதலிலிருந்து வித்தியாசப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கீழ்க்கண்டவாறும் திஸ்ஸநாயகம் சொன்னாரென்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
~~எல்.ரி.ரி.ஈ. யிடமிருந்து தான் என்றுமே பணம் பெற்றதில்லையென்று அவர் மேலும் சொல்லியிருக்கிறார். ஆனால் வர்த்தக ரீதியிலேயே தனது பிரசுரங்களுக்காகப் பணம் திரட்டினாரென்று அவர் கூறியுள்ளார். புலி இயக்க உறுப்பினர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் அவர்களுடன் திஸ்ஸநாயகம் பேசியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்தித்திருக்கிறார். அவர் எழுதிய கட்டுரைகளில் எதுவுமே பயங்கரவாதத்துக்கு உதவுவதற்காக எழுதப்பட்டவை அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
திஸ்ஸநாயகம் நோர்த் ஈஸ்டர்ண் சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட ஆசிரியர் தலையங்கங்கள் இரண்டினில் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்தே குற்றங்கள் சாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு ஜுலையிலும், டிசம்பரிலும் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களில் தெரிவிக்கப்பட்ட இரண்டு பந்திகளே பிரச்சினையின் மையமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. ”இப்போது தமிழர்களுக்குப் பாதுகாப்பளிப்பது, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு அரசியலை வரைவிலக்கணம் செய்யும்” என்ற தலைப்பில் ஜுலை மாதத்தில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் ஒன்று.
”அரசாங்கம் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கப் போவதில்லையென்பது ஓரளவுக்கு வெளிப்படையானது. உண்மையில் அரசாங்க பாதுகாப்புப் படையினர்தான் கொலைகளைப் புரியும் முக்கியமானவர்கள்.” இது ஜுலையில் பிரசுரமாகியிருந்தது.
”சிவிலியன்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்களுடன் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றை வழங்க மறுப்பதனூடாக அவர்களைப் பட்டினி போடுவதற்கான முயற்சிகள், வாகரையிலிருந்து மக்களை விரட்டி, அங்கு மக்களை வசிக்காமல் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயத்தை இங்கு இதனை எழுதிக்கொண்டிருக்கையில் வாகரை கடுமையான ஷெல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கிறது.” இந்தப் பந்தி கிழக்கு மாகாணத்தின் வாகரையில் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம் உச்சம் பெற்றிருந்தபோது எழுதப்பட்டது. அதாவது டிசம்பர் மாத நோத் ஈஸ்டர்ண் மந்லியின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த இரு பந்திகளில் தெரிவிக்கப்பட்டவற்றை, இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்குடனும் வன்செயல்களை உருவாக்கும் நோக்குடனும் எழுதப்பட்டவையென்று நீதிமன்றம் அர்த்தப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது, அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பது மற்றும், அவை பற்றிக் கலந்துரையாடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமென்று ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஊடக அமைப்புகள் பல பட்டும் படாமலும் தீர்ப்புப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. வெளிநாட்டு ஊடக அமைப்புகளும், மனித உரிமை ஸ்தாபனங்களும் தெரிவித்திருக்கும் எதிர்க் கருத்துகளையும் பல ஊடகங்கள் அப்படியே பிரசுரித்திருக்கின்றன.
பாராளுமன்றம், நீதித்துறை, செயலாற்று அதிகாரமிகு ஜனாதிபதிக்கு எல்லாம் பத்திரிகைகளும் மீற முடியாத சிறப்புரிமைகள் இருக்கின்றன. பயங்கரவாதச் சட்ட விதிகளுக்கு அமையவே திஸ்ஸநாயகம் தண்டிக்கப்பட்டுள்ளாரென நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தச் சிறப்புரிமையும் மீறக் கூடிய அளவுக்கு வார்த்தை ஜாலங்களை ஆடக் கூடிய ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜொஸ் வூல்ப், செல்வி ஜுடித் மில்லர் போன்றவர்கள் தமது எழுத்துக் கருத்துக்களுக்காகச் சிறை வைக்கப்பட்ட சம்பவங்களையும் இவர்கள் குறிப்பிட்டுச் சிலம்பம் ஆடுவார்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடக அமைப்புகள் விடுத்த அறிக்கையை மீள்பிரசுரம் செய்வார்கள். கூடார்த்தச் சித்திரங்கள் மூலம் வார்த்தைகளைப் பயன்படுத்தாமலேயே தாம் சொல்ல நினைக்கும் கருத்தை மக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பார்கள். எது எப்படியிருந்தாலும், ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென்பதே ஊடகங்களும் ஊடக அமைப்புகளும் ஒருமித்து எழுப்பும் குரல்களாக உள்ளன.
1983 ஆடி இன சங்காரத்தின் சூத்திரதாரியும் ~நரி பானா என்று அழைக்கப்பட்டவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் 1979இல் கொண்டு வரப்பட்டதே பயங்கரவாதத் தடைச் சட்டம். சித்திரவதை, சுதந்திர உரிமையை வேண்டுமென்றே மீறுதல், ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனவெறி, பாரபட்சம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மறுத்தல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் வழிவகுப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இவைகளில் ஓரளவுக்கேனும் உண்மைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சில இளம் பெண்களை ஆடையைக் கழற்றுவேன் என்று விசாரணையாளர்கள் மிரட்டினார்கள் என்று கூடக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
திஸ்ஸநாயகத்தின் வழக்கு விசாரணையோடு சம்பந்தப்பட்ட பல கதைகள் பத்திரிகைக் காரியாலயங்களில் உலா வருகின்றன. திஸ்ஸநாயகத்துக்குக் கிடைத்த இருபது வருட சிறைத் தண்டனை பற்றிய தீர்ப்பைச் சகல பத்திரிகைகளுமே தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. ஒரேயொரு ஆங்கிலப் பத்திரிகை மட்டும் அன்றைய தினம், தீர்ப்பு வழங்க வருகை தந்த நீதிபதிக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலைத் தலைப்புச் செய்தியாகத் தந்திருந்தது.
2006இற்கும் 2007இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவற்றுக்காக, 2008 மார்ச் மாதம் ஜசீகரனையும் வளர்மதியையும் பார்ப்பதற்குப் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார். திஸ்ஸநாயகத்துக்கு ஒன்றில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். அதாவது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். இப்படி மன்னிப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. மன்னிப்பு வழங்கப்படுவதைத் திஸ்ஸநாயகம் எதிர்பார்க்கவில்லை என்பது போலவும் தெரிகிறது. மேன்முறையீடு செய்யப்படவிருக்கிறது. தீர்ப்புத் திருத்தப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மேன்முறையீடு செய்யப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஊடகவியலாளர்கள் விமர்சிக்க முடியாது.
ஆனால் ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென உரத்துக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.
(நன்றி தினமுரசு)
ss ganendran
இத்தீர்ப்பு ஊடகத்துறைக்கு இலங்கையில் போடப்பட்ட பூட்டு திசனாயகம் இலங்கை அரசை விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர புலிகளை ஆதரித்து எதையும் எழுதவில்லை என்பது நீதிமண்றில் எடுத்துக் காட்டப்பட்டும் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையான விடயமே.
திசனாயகத்திற்காக புலம் பெயர்நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களும் போராட முன்வருவதே சிறந்த்தவிடயம்