துருக்கி யில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் தொகை 31ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினமிரவு துருக்கியில் பாரிய மழை பெய்தமையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். பலர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியுள்ளனர். ஐம்பது வருடங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அறிவிக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மக்கள் கூரைகளிலும் வாகனங்களிலும் ஏறி காப்பாற்றும்படி அவலக்குரல் எழுப்பினர். சிலர் உயர்ந்த வாகனங்களுக்கு மேல் ஏறி நின்றனர். ஆனால் காட்டு வெள்ளம் போல் பாய்ந்து வந்த வெள்ளம் வாகனங்களையும் அடித்துச் சென்றது. தொள்ளாயிரம் தீயணைப்புப் படையினர் ஆறு இராணுவ ஹெலிகொப்டர்கள், முப்பது பாரம் தூக்கி இயந்திரங்கள் என்பன மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஆரம்பத்தில் 18 பேரின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்தனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் பல பெண்களும் இறந்து கிடந்தனர். உள்துறை அமைச்சர் மக்களை அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் மேலும் மழை பெய்யலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
துருக்கிய பிரதமர் தையிப் எடார்கன் தலைநகர் ஸ்தான்புலுக்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார். இதுவரை ஆயிரம் பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு உதவ கிரேக்கம் முன்வந்துள்ளது.
கூடாரங்கள், உணவுப் பொருட்கள், உடுதுணிகள் ஆகியவற்றை எகிப்தின் செம் பிறைச் சங்கம் வழங்கி வருகின்றது. வெள்ளம் காரணமாக உள்ளூரில் இடம்பெயர்ந்தோரின் புள்ளி விபரங்களை மதிப்பீடு செய்ய துருக்கி உள்நாட்டமைச்சு உத்தரவிட்டுள்ளது. 150 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெள்ளத்தில் நஷ்டமடைந்துள்ளன.