சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளரான சுரேஷ் விக்கிரமசிங்க (35) நேற்று (10) தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி வாகன விபத்துக்குள்ளான சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
ஊடகவியலாளரான சுரேஷ¤ம் அவரது மனைவியும் கோட்டே பெத்தகான சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனமொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகன சாரதியின் தவறின் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
சுரேஷ் விக்கிரமசிங்கவின் மனைவியான வாசனா விக்கிரமசிங்க இவ்விபத்தினால் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைபெற்றுவரும் நிலையில், சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்றுவந்தார்.
சுரேஷ் விக்கிரமசிங்க கடந்த 2001 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி சேவையில் இணைந்துகொண்டார். செய்தி வாசிப்பாளர், செய்தி தயாரிப்பாளர், செய்தி சேகரிப்பாளர் என்ற பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்த சுரேஷ், சிறந்த புகைப்பட கலைஞருமாவார். இவர் ஒரு பட்டதாரியாவார்.
உயிரிழந்துள்ள ஊடகவியலாளரான சுரேஷின் பூதவுடல் கொஸ்கம, பஹலகமவிலுள்ள 372/2 இலக்கத்தைக் கொண்ட அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறும்.