வவுனியா – நகர சபைக்கு தெரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உறுப்பினர்கள் மூவரும் நேற்று வியாழன் காலை 10 மணியளவில் வைரவ புளியங்குளத்தில் உள்ள மாவட்ட அலுவ லகத்தில் சமாதான நீதவான் வி. எஸ். தேவராசா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜி.ரி. லிங்கநாதன், எஸ். குமாரசாமி, கே. பார்தீபன் ஆகியோரே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களாவர். தேர்தலில் போட்டியிட்ட புளொட் அமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் சுயமாகவும் தனித்துவமாகவும் நாங்கள் போட்டியிட்ட போது மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்த வவுனியா நகர வாக்காளர்களுக்கு முதலில் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டவர்கள். இந்த சபை நிர்வாகம் எங்களுக்கு கிடைக்காத போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை செய்வோம். மக்களுடைய நலனில் முழு அக்கறை கொண்டு புதிய சபை நிர்வாகம் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் நாம் எதிர்க்கட்சியிலிருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்.
நகரத்தின் தேவைகள், குறைபாடுகள் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக மக்கள் எமக்கு தெரியப்படுத்தினால் அதன் மூலம் மக்களுக்குரிய சேவைகளை செய்ய முடியும் என சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர் உரையாற்றிய உறுப்பினர் லிங்கநாதன் தெரிவித்தார்.
புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க. சிவநேசன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.