பாராளு மன்றத்தினூடாக நிதி ஒதுக்கப்படுகின்ற எனினும், கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாத நிறுவனங்களை “பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜர்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு சபையில் நேற்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ‘கோப்’ பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையடுத்தே சபையில் மேற்படி இணக்கம் தெரிவிக்கப்பட்டது
பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் சில நிறுவனங்களை கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாது என்பது பற்றியும் ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐ.தே.க பாராளுமன்ற உறுப் பினர்களான தயாசிரி ஜயசேக்கர, ரவிகருணாநாயக்க ஆகியோரும் ‘கோப்’ குழு வில் கலந்து கொண்டன நபர்கள் என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்தனர்.
2008 டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பொது நிறுவனங்கள், தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள் பின்னர் ஊடங்களில் வெளிவந்ததாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டார்.
பத்திரிகை பேரவையொன்றை அமைக்க வேண்டும். அதுவும் ஒரு மாதத்தினுள்ளேயே இதனை அமைக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் அதற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்குட்படுத்த சட்டத்தில் வழிவகைகள் செய்யப்படவில்லை என்று கோப் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் சபையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கோப் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அனுரகுமார திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, தயாசிறி ஜயசேக்கர ஆகியோருக்கிடையே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலையிட்டு மேற்படி பாராளுமன்றத்தினால் நிதி ஒதுக்கப்படுன்ற நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்படுத்தும் வகையில் கோப் முன்னிலையில் ஆஜர்படுத்து வதற்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சபையில் இணக்கமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு சபையிலுள்ளோர் இணக்கத்தை தெரிவித்தனர்.