தோட். தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு நேற்றும் இணக்கப்பாடின்றி முடிவு – மீண்டும் இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாட் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக 7வது தடவையாக நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு தொழிற்சங்கங்களுக்கு மிடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்ததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கூட்டுத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜகிரியில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. இப்பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தில் ஒரு நாள் சம்பளத்தை 330 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரித்துத் தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இருப்பினும், அதற்கு கூட்டுத் தொழிற்சங்கங்கள் இணங்காமையினால் இந்தப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

எமது கோரிக்கைபடி ஒரு நாட்சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும்வரை முதலாளிமார் சம்மேளனத்தின் எந்தவொரு தீர்மானத்துக்கும் இணங்கப் போவதில்லையென தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளிகளுக்கு 500 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இன்று 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் எட்டாவது தடவையாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் கூட்டுத் தொழிற்சங்கம் சார்பில் கே. வேலாயுதம், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், இரா. யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தோட்டத் தொழிலாளிகளின் ஒத்துழையாமை போராட்டம் நேற்றும் 09வது நாளாக முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, முதலாளிமாருக்கெதிராக கோஷங்களையும் எழுப்பினர்.முதலாளிமாருக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியானது. இரண்டு வருடங்களுக்கொரு தடவை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *