பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம் பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல்.
முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர்.