அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதென்பது ஆபத்தான யோசனை என்றார்.
அத்தகைய திட்டங்களின் பாரதூர விளைவுகள் பற்றி சிந்திக்கப்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்ற அவர் இயற்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்றும் அதனுடன் விளையாடுவது பேரழிவினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அனைத்து நதிகளையும் இணைக்கலாம் என்கிறாரே என்று கேட்டபோது, அத்தகைய இணைப்பு ஆபத்தானது என்பது தனது சொந்தக் கருத்து என்றும், மேலும் மாநிலங்கள் நதி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளை வேறு வழிகளிலே தீர்த்துக்கொள்ள முயலலாம் என்றும் ராகுல் காந்தி பதிலளித்தார்.