இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களின் தங்கியுள்ளவர்களுக்கான நடமாடும் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவியை தொடர்ந்து வழங்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அங்கு தங்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு விரைவாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஐ. நா கூறியுள்ளது.
வன்னி மோதல்களால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் இந்த வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்குள்ளவர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருப்பதாக கூறும் இலங்கை அரசாங்கம், அவர்களை சோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக கூறுகிறது.
ஆனால், இந்த முகாம்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற ஐ. நா அமைப்பு இவ்வாறு பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பொறுமையிழந்து வருவதாக தென்படுகிறது.
ஐ.நாவின் இலங்கை அலுவலக தலைமை பொறுப்பாளரான நீல் பூன் அவர்கள், இவ்வாறு அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முகாம்களுக்கு தொடர்ந்து நிதி வழங்குவது முடியாது போகலாம் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து இதுவரை 19360 பேரை விடுவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. அதேவேளை அடுத்தகட்டமாக மேலும் பத்தாயிரம் பேரை விடுவிக்கும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.