வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷ, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார்.
அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை இடைத்தங்கல் நிவாரண கிராமங்களிலேயே வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அவர்களை எவ்வளவு விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்பங்களைச் சேர்ந்த 4585 பேர் இரண்டு தொகுதிகளாக யாழ். மாவட்டத்தி்ற்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் அம்பாறை மாவட்டத்திற்கும், 520 குடும்பங்களைச் சேர்ந்த 1896 பேர் இரண்டு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், 166 குடும்பங்களைச் சேர்ந்த 553 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைவிட, 751 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7334 முதியவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 121 இந்து மற்றும் கிறிஸ்தவ குருமார்களும், அரச அதிகாரிகளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருமாக இதுவரையில் 19 ஆயிரத்து 360 பேர் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 9920 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வெள்ளியன்று ஆரம்பமாகி, அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
palli
திருத்தி கொ(ள்)ல்லுங்கள் :
அனுப்படவில்லை சிறையில் இருந்து விடுவிக்கபட்டனர்,