விசா விண்ணப்பங்களை கையாள்வதில் அரசியல் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கு முகமாக பிரிட்டிஷ் பதில் உயர்ஸ்தானிகர் மார்க் கூசிங் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் எந்தவொரு சம்பவம் குறித்தோ அரசியல் பாரபட்ச குற்றச்சாட்டுபற்றியோ நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், பதவியிலிருந்து விலகும் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கோஹனவுக்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் விசா வழங்க மறுத்துவிட்டது என்ற செய்தி வெளியான மறுநாளே இந்த பத்திரிகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்கள் விசா வழங்கல் நடைமுறைகளில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எதுவித ஆதாரமும் அற்றவை. தனிப்பட்ட விசா விண்ணப்பங்கள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை. ஆனால், பல விண்ணப்பங்கள் குறித்து வெளியான விபரங்கள் முற்றுமுழுதாகத் தவறானவை. இலங்கையிலிருந்து வருவோரை பிரிட்டன் வரவேற்கிறது. ஒரு மாதத்தில் 1,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு விஜயம் செய்ய நாம் விசாக்களை வழங்குகிறோம். கொழும்பில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றுக்கு நாம் விசா வழங்குகிறோம். இலங்கையிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் விசா கோரி விண்ணப்பிக்கும் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நாம் துரிதமாகவே விசாக்களை வழங்குகிறோம். பிரிட்டிஷ் குடிவரவு விதிகளுக்கு அமையவே நாம் இந்த விசாக்களை வழங்குகிறோம். அதாவது, உதாரணமாக, தனிப்பட்ட விஜயங்களுக்கு இலவச விசாக்களை எம்மால் வழங்கமுடியாது. முக்கிய புள்ளிகளின் சகல விஜயங்களையும் பொறுத்த வரையில், சுமுகமான சேவையை உறுதிப்படுத்தும் முயற்சியில், உயர்ஸ்தானிகராலயம் வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கி செயற்படுகிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் தொடரவே நாம் விரும்புகிறோம்.
விசா வழங்கல் நடைமுறை:
இலங்கை விசாக்களுக்கான தற்போதைய நடைமுறை நேரங்கள்:
மாணவர்கள்: 10 வேலை நாட்கள் குடியமர்வு அல்லாதவை (ஏனையவை) : 10 வேலை நாட்கள் குடியமர்வு: 42 வேலை நாட்கள் விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, குறிப்பாக விசா அதிகமாக கோரப்படும் காலங்களில் விசாக்களை விநியோகிக்க போதிய அளவு கால அவகாசத்தை எமக்கு வழங்கவேண்டும். பிரயாணம் செய்யத் திட்டமிட்டுள்ள தினத்திற்கு 3 மாதங்கள் வரை முன்னதாகவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது உசிதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.