தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் பத்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெருந்தோட்டப் பகுதிகளில் ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சில இடங்களில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சில இடங்களில் கூட்டுப்பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் நடைபெற்றதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதுவித இணக்கப்பாடும் எட்டாத நிலையில் முடிவடைந்தது. இந்நிலையில், எட்டாவது தடவையாக நேற்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாக இருந்த பேச்சுவார்த்தை மாலை 3.30 மணிக்கே ஆரம்பமானதாகவும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், போராட்டம் வெற்றிபெற வேண்டுமென கோயில்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை செய்து கொள்ளப்படுகிறது. தொழிலாளர்களின் சம்பளம் உட்பட அவர்களின் சேமநலன்கள் தொடர்பாக செய்து கொள்ளப்படும் இவ் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதுடன் சம்பள உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான இந்த கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம். ஆரம்ப கட்டப் பேச்சுகளில் அவர்கள் முதலாம் ஆண்டில் 330 ரூபாவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவையும் தருவதாகத் தெரிவித்தனர். எனினும் எமது கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமல் இருப்பதால் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக இ. தே. தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.