ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்ய தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். 2009 ஆம் வருடத்தை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வருடமாக பிரகடனப்படுத்தி உள்ளதால் மாணவர்களின் ஆங்கிலக்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயம் மூலம் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இத்திட்டம் ஆறு மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒன்றரை வருடத்துக்குள் நாடளாவிய ரீதியில் 3500 கணணி ஆய்வுகூடங்களை அமைக்க உள்ளதாகவும் வடக்கு மற்றும் கிழக்கில் மின்சார வசதி இல்லாத பகுதிகளில் சூரியசக்தி மூலம் இயங்கும் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்