தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாட் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாட் சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையீடு செய்ய உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.