ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
பொதுமக்களின் பணத்தில் அரசு அதிகாரிகள் சொத்து சேர்த்தால், அதை பறிமுதல் செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்புத் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, தலைமை நீதிபதி இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அதேபோல், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முக்கியப்புள்ளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதியளிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
சிறப்பு நீதிமன்றங்கள் பற்றாக்குறையால், ஏற்கெனவே 9 ஆயிரம் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ஊழல் தடுப்பு அமைப்புக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலையில், வழக்குத் தொடர அனுமதியளிப்பது மற்றும் பெருமளவு சாட்சிகளை கொணர்வது ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற காலதாமதம் ஆகியவை, ஊழல் வழக்குகளில் முறையான தண்டனை பெற்றுத் தருவதற்கு பெரும் தடையாக உள்ளன என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கவலை வெளியிட்டார்.