மக்களை மிக விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்தும் நோக்கில் மேலும் ஐந்து தன்னியக்க இயந்திரங்கள் விமானம் மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட ஐந்து இயந்திரங்களையும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி பொறுப் பேற்றார். மணிக்கு 2700 சதுர மீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் ஆற்றலைக் கொண்ட மேற்படி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் தலா ஐந்து தொன் எடை கொண்டவையென்றும் 270 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவை எனவும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
குரேஷியாவிலுள்ள டொன்கின் என்ற நிறுவனத்தில் கொள் முதல் செய்யப்பட்டுள்ளதுடன் எம்.வி-4 ரக இயந்திரங்கள் என்பதாலும், மிகவும் கடினமான இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாலும் எவ் வகையான மிதிவெடி, கண்டிவெடிகளாக இருப்பினும் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பசில் ராஜபக்ஷ எம்.பியின் வழிகாட்டலுடன் மிகவும் துரிதமாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4ம் திகதியும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொய்கா ரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
அவற்றை விட இவை சிறியவை என்பதால் மக்கள் குடியிருப்புகள், ஏரிக் கரைகள், கிணற்றடி, வயற்காணிகள் போன்ற பகுதிகளில் மிதிவெடிகளை மிக எளிதாக அகற்ற முடியும் என்றும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இந்த இயந்திரங்களுக்குரிய உதிரிப்பாகங்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் ஆழம் வரை ஊடுருவி மிதிவெடிகளை அகற்றும் ஆற்றலும் இந்த இயந்திரத்துக்குள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.