சனல் 4 – பிரிட்டன் ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறையிடும்

mahinda-samarasinha.jpgஇலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்திலான வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டனிலுள்ள ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை முறைப்பாடு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் மேற்படி தொலைக்கட்சி நிறுவனம் மட்டுமல்ல ஏனைய ஊடக நிறுவனங்களும் செயற்படக் கூடாது என்பதற்காக இலங்கை இந்த விடயத்தில் மிக கவனமாக செயற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஐ. நா. பாதுகாபபுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வீடியோ காட்சி பொய்யானது, சோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை உறுதிபட நிரூபித்துவிட்டோம்.  இதன் அறிக்கை நேற்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன், நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹேய்ம், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தீய சக்திகள் இயங்கி வருகின்றன என்பதை உணர முடிகிறது – திட்டமிட்டு செயற்படும் இவர்கள் யார் என்பது பற்றி எமக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம். மேற்படி வீடியோ காட்சி போன்று வவுனியா நிவாரணக் கிராமங்களைப் பற்றிய வீடியோ காட்சியொன்றையும் சனல் 4 ஒளிபரப்பியது. இதுபற்றி உங்களுக்குத் தெரியுமா என்று அமைச்சரிடம் வினவியபோது.

தெரியும், அந்த வீடியோ காட்சியை ஒளிபரப்புவதற்கு முன்னதாக சனல் 4 எம்முடன் தொடர்புகொண்டு வினவியதுடன் எமது அபிப்பிராயத்தையும் சேர்த்து ஒளிபரப்பினார்கள். அவர்களுக்கு இலங்கை தொடர்பாக செய்திகளோ, வீடியோ காட்சிகளோ கிடைக்கும் பட்சத்தில் எம்மிடம் கலந்து பேசவேண்டும். அதனை விடுத்து எழுந்தமானத்தில் ஒளிபரப்பக்கூடாது. இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கப்படமாட்டாது என்று கூறினார்.

இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக இது அமைந்துள்ளது. செனல் 4 நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பது பற்றியும் இலங்கை ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *