ஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர். சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கியது.
இதனால் நாடு முழுவதும் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். செத்த வீட்டில் புடுங்குவது மாதிரி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் ஐந்து மடங்காக உயர்த்தி தங்கள் குறுகிய புத்தியைக் காட்டின. இந் நிலையில் ஜெட் நிர்வாகம், மத்திய விமானத்துறை அதிகாரிகள், பைலட்டுகள் இடையே நேற்று இரவு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. சுமார் 7 மணி நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமான சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் துவங்கியுள்ளன. இதில் சர்வதேச விமான சேவைகளும் அடக்கம்.
பேச்சுவார்தையில் எந்த வகையான சமரசம் ஏற்பட்டது என்பதை இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை ஜெட் நிர்வாகம் மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும், அதே போல ஜெட் விமானிகள் சங்கம் அமைப்பதை தவி்ர்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.