ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.
சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.