கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும் – சித்தார்த்தன்

130909sittar.jpgத. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு

கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.

அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.

இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.

எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.

ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.

அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?

பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.

ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.

மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.

கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?

பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.  இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.

கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?

பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.

இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.

கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளிர்கள்?

பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • Thaksan
  Thaksan

  இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களில் சித்தார்தன் வெளிப்படையாக பேசக் கூடியவர்போல் தோன்றுகிறது. புளொட் இழைத்த தவறுகளுக்கு இவரும் தார்மீக பொறுப்பு எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்கு தாமும் ஓரு காரணம் என அவர் கொழும்பு தமிழ்ச் சங்க மேடையில் பகிரங்கமாக கூறியது மனச்சாட்சியின் வெளிப்பாடு என நம்பலாம்.

  Reply
 • palli
  palli

  எனக்கு இதில் உடன்பாடு இல்லை; காரனம் இவர் ஒரு பொம்மைதான்; இவரால் அரசிடம் இருந்தல்ல அவரது அமைப்பான கழகத்திடம் இருந்து கூட ஒரு செயற்பாட்டை செய்ய முடியாது; இது பல்லியின் கற்பனையல்ல, சித்தார்த்தனின் வாக்குமூலம்; சில காலத்துக்கு முன்பு ஒரு சாதாரன விடயமாக அவரிடம் தொடர்பு கொண்டபோது அவர் சொன்னார் இப்போதெல்லாம் வவுனியாவில் இருக்கும் கழகத்தினர் தன்சொல்லை கேப்பதைவிட சர்வதேச பொறுப்பாளரின்(கழக) கேக்குறார்களாம்;

  Reply
 • Neville Perera
  Neville Perera

  தமிழ் மக்களோ மண்ணில் அனாதையாக்கப்பட்டுள்ளனர். பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும். மக்களிள் தலைவிதியை தங்கள் பேரத்துக்குரிய பொருளாக்கியுள்ளனர். மக்களைச் சார்ந்து நின்று, சொந்த வழியில் இந்த பிரச்சனையை தீர்க்க முனையாது, ஏகாதிபத்திய முரண்பாட்டுக்கு பின் செல்லுமாறு வழிகாட்ட முனைகின்றனர். இப்படி இலங்கை ஏகாதிபத்திய முரண்பாட்டின் ஆடுகளமாக மாறிவருகின்றது. மக்களை ஏகாதிபத்திய நலனுக்குள் மோத வைக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் நடைபெறுகின்றது. இதை முறியடிக்காமல், இதை எதிர் கொள்ளாமல், இலங்கையில் வாழும் எந்த மக்களுக்கும் இனி விடிவில்லை

  Reply
 • மகுடி
  மகுடி

  யார் அந்த சர்வதேச பொறுப்பாளர்?
  எதையும் செய்ய முடியாவிட்டால் மகிந்தவிடம் சரணடையவும். பிளீஸ்.

  Reply
 • தனஞ்சேயன்
  தனஞ்சேயன்

  கண்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மகாநாட்டில் ரணில் தெரிவித்த ஒரு கருத்து அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. இலங்கைக்குக் கூட்டாட்சியே பொருத்தமானது என்று அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. புத்தபகவானும் கூட்டமைப்பு பற்றிக் கூறியிருந்தார் என்றும் ரணில் சொன்னாராம்.

  ரணில் மனம் போனபடி பேசுபவர். அண்மையில் மீனவக் கிராமமொன்றுக்குத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்று உரமானியம் பற்றிப் பேசியதாக ஒரு கதை. சிங்கள மொழியில் அரசியல் பதங்களைப் பொறுத்த வரையில் ரணிலுக்கு நிரம்பவே தடுமாற்றம் உண்டு. கூட்டாட்சி என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டுதான் கண்டியில் பேசினாரா என்பது விளங்கவில்லை.

  அது எவ்வாறாயினும் சமஷ்டியையும் ((FEDERALISM)கூட்டாட்சியையும் (CONFEDERATION)ஒன்றெனக் கருதிக் குழம்பும் பலர் எம் மத்தியில் உள்ளனர். அப்படியானவர்களின் தெளிவுக்காக விளக்கம் தேவைப்படுகின்றது. நாட்டின் இறைமை பாதிக்கப்படா வண்ணம் சுயாட்சி அதிகாரமுடைய அலகுகள் அமைவது சமஷ்டி. இதில் இரண்டு வகைகள் உள்ளன. சமஷ்டி அலகுகள் மத்தியிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருப்பது ஒரு வகை. அமெரிக்காவின் மாநிலங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மத்தியிலும் பார்க்கக் குறைவான அதிகாரங்களைச் சமஷ்டி அலகுகள் கொண்டிருப்பது இரண்டாவது வகை. கனடாவின் மாகாணங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

  கூட்டாட்சி என்பது சமஷ்டியிலும் பார்க்க வேறானது. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து ஒரே நாடாகச் செயற்படுவதே கூட்டாட்சி. இவ்வாறு இணையும் நாடுகள் ஒவ்வொன்றும் முன்னர் இறைமையுள்ள தனித்தனியான நாடுகளாக இருந்தவையே. கூட்டாட்சி அமைப்பதற்காக இவை தமது இறைமைகளைக் கைவிடுவதில்லை. கூட்டாட்சி அமைக்கும் நாடுகளின் இறைமைகளை உள்ளடக்கியதாகவே கூட்டாட்சியின் இறைமை அமையும். ஒரு நாடு கூட்டாட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தால் தனது இறைமையுடன் விலகிச் சென்று தனிநாடாகச் செயற்படலாம். ஐக்கிய அரசுக் குடியரசு இதற்கு நல்ல உதாரணம்.

  எகிப்தும் சிரியாவும் 1958 பெப்ரவரி 1ந் திகதி ஐக்கிய அரபுக் குடியரசு என்ற பெயரில் கூட்டாட்சியாக இணைந்தன. எகிப்தின் தலைவர் நாஸர் ஜனாதிபதியாகவும் சிரியாவின் தலைவர் ஆஸாத் உப ஜனாதிபதியாகவும் பதவியேற்றனர். 1961 செப்டெம்பர் மாதத்தில் சிரியா கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றது.அதன் பின் இரண்டும் தனித்தனியான இறைமையுள்ள நாடுகளாகின.

  இலங்கையின் இனப் பிரச்சினைக்குக் கூட்டாட்சியே தீர்வு எனக் கூறுவது அர்த்தமற்ற பேச்சு கூட்டமைப்பின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக்கொண்டு ரணில் கண்டியில் பேசியிருந்தால் மோசமான பேச்சு.

  Reply