மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உட்பட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்தார்.
பிரதான சந்தேக நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கள்ள நோட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அலவ்வை பிரதேசத்திலுள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் 1000/- ரூபாவை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து அலவ்வை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபரின் வாக்கு மூலத்தையடுத்து சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (1000/-) ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் 318. (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 3 இலட்சத்து 18 ஆயிரம்) மீட்டெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸாருடன் இணைந்து இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.