அரச ஊழியர்களின் தொகையை ஐ. தே. க 6 இலட்சத்திற்கு குறைத்தது; நாங்கள் 12 இலட்சம் வரை உயர்த்தியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஐக்கிய தேசியக் கட்சி உலக வங்கியுடன் பேச்சு நடத்தி இந்த நாட்டின் அரசாங்க உத்தியோகத்தர்களை ஆறு இலட்சம் வரை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அரசாங்க உத்தியோகத்தர்களை 12 இலட்சமாக அதிகரிக்க முடிந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.

முல்கிரிகல தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உ¨யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் தம்மானந்த வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்றது.

இதில் அவர் மேலும் கூறியதாவது:- இந்நாட்டின் சனத்தொகையில் 17 பேரில் ஒருவர் அரசாங்க உத்தியோகத்த ராவார். இந்த நாட்டின் சிறிய மனிதர்களின் கனவுகளை நனவாக்கவும், அச்சம் பீதி சந்தேகமற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் முடிந்துள்ளமையை நினைக்கையில் எனக்கு பெருமையாகவிருக்கின்றது. முழு நாட்டிலும் இன்று அபிவிருத்தி முன்னெடுக்கப்படு கிறது. கிராமங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

வடக்கின் வசந்தம், கிழக்கு உதயம், உள்ளிட்ட நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாரிய நீர்த்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் இது. அந்தக் காலத்தில் மேல்மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

நான் தான் உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு உண்டு என்பதை உலக நாடுகளுக்கே கூறியவன். எமது நாட்டிலே கடந்த 30 வருடகாலமாக நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு தேடிய என்னை இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த தாய் நாட்டில் பிறந்தவர்கள் தான். இந்த நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ளவர்களென்றால் இவ்வாறு செய்யமாட்டார்கள்.

அது தொடர்பாக வீடியோ நாடாக்கள் தயாரிக்கிறார்கள். தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள். ஐரோப்பாவுக்கு போகிறார்கள். செனற் சபைக்கு செல்கிறார்கள்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் இந்த நாட்டை உண்மையாக ஆதரிப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். யார் எதைக் கூறினாலும் இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பம் எமக்குச் சார்பாக உள்ளது. தென்மாகாணத் தேர்தலின் மூலம் இது மேலும் உறுதியாகுமெனவும் ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • தனஞ்சேயன்
    தனஞ்சேயன்

    கடந்த காலத்தை மறந்துவிடும் வழக்கம் சில அரசியல்வாதிகளிடம் உண்டு. பதவியில் இருக்கும் போது தாங்கள் என்ன செய்தார்களோ அதையெல்லாம் எதிரணிக்கு வந்தவுடன் மறந்து கோரிக்கைகளை முன்வைப்பதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவையும் இந்த வகையிலேயே சேர்க்க வேண்டும்.

    ரணில் விக்கிரமசிங்ஹ இப்போதெல்லாம் அரசாங்க ஊழியர்களுக்காகப் பரிந்து பேசத்தொடங்கியிருக்கின்றார். அரசாங்க ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 7500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அப்படி வழங்காவிட்டால் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றார். அரசாங்க ஊழியர்களின் பக்கம் ரணில் ஏன் திரும்புகின்றார் என்பதை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். எல்லாத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையை ஏற்படுத்தியது ரணிலின் ‘சாதனை’யாக உள்ளது.

    இத் தேர்தல்கள் எல்லாவற்றிலும் தபால் மூல வாக்களிப்பில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒவ்வொரு அரசாங்க ஊழியரிலும் குறைந்தது பத்து வாக்காளர்களாவது தங்கியிருப்பார்கள் என்பதால் அரசாங்க ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ரணில் இப்போது முயற்சிப்பது போலத் தெரிகின்றது. உலக வங்கியின் நிபந்தனையை ஏற்று அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பதை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்திய விடயம் பகிரங்கமானது. எல்லோருக்கும் தெரிந்தது.

    இலங்கையின் அரசாங்க ஊழியர்கள் மறதிக்காரர்களல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த துன்பங்களை அவர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலை நீக்கம் செய்த கட்சி என்றால் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே.

    முதலில் கந்தசாமி என்ற வேலை நிறுத்தக்காரர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பலிகொள்ளப்பட்டார். பின்னர் சோமபால. 1980 வேலை நிறுத்தத்தின் போது வேலை நிறுத்தக்காரர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்குப் பாதாள உலகக் கும்பலை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயன்படுத்தியதையும், அந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டதையும் அரசாங்க ஊழியர்கள் மறந்துவிடப்போவதில்லை.

    ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் அரசாங்க ஊழியர்களை வென்றெடுப்பதற்கான வீண் முயற்சியில் ஈடுபடுவதை விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் பிரதான பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைத்துத் தனது அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வாரேயானால் சிதைவிலிருந்து கட்சியை ஓரளவு காப்பாற்ற முடியும்.

    தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் எதுவும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இது வரையில் இல்லை. பிரதான பிரச்சினைகளிலிருந்து ஒதுங்குபவர்களை மக்கள் விரைவில் ஒதுக்கிவிடுவார்கள்.

    Reply
  • jeeva
    jeeva

    கடந்த காலத்தை மறந்து விடுவது சில அரசியல்வாதிகளிடம் உண்டென தனஞ்சயன் சொன்னது சரி. சில அரசியல்வாதிகள் என்று சொல்வதிலும்விட பல என சொல்ல்லாம். ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லா அரசியல் வாதிகளுமே இப்படித்தான்.
    இதேபோலவே மஹிந்தாவும் முன்னர் ஐ.தே.க ஆட்சியின்போது ஜே.வி.பியினருக்கு நடந்த மனித உரிமை மீறல்களை உலகுக்கு கொண்டு சென்ற ‘நாயகனாக’ திகழ்ந்தார். முன்னர் ‘மார்கா’ நிறுவனத்தில் வேலை செய்தபோது தான் தயாரித்த அறிக்கைகளைக்கூட தன்னிடம் கேட்டுச் சென்று உலகநாடுகளில் வெளிப்படுத்தினார் மஹிந்தா என நீதிமன்றில் சொல்லி இருக்கிறார் அண்மையில் சிறையிடப்பட்ட திசைநாயகம்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலை நீக்கம் செய்த கட்சி என்றால் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே.- தனஞ்சேயன் //

    தனஞ்சேயன்,
    70 களில் ஸ்ரீமாவோ காலத்தில் பரந்தன் இரசாயணத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்தவர்களை வேலையிலிருந்து நீக்கியது தான் முதன்முதலில் நடந்ததென நான் நினைக்கின்றேன்.

    Reply