கொழும்பு ஐ. சி. சி. ஒரு நாள் போட்டிக்கான தரப்படுத்தல் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி, முதலாமிடத்தை மிக விரைவாக பறிகொடுத்துள்ளது. முத்தரிப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்திய போது தரப்படுத்தல்.
பட்டியலில் முதலிடத்தை முதல் முறையாக பெற்றது. நேற்று முன்தினம் இலங்கையிடம் தோல்வி அடைந்ததன் மூலம் முதலிடத்தை 24 மணி நேரத்தில் இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் முதலிடம் பெற்றதை கொண்டாடக் கூட நேரம் கிடைக்கவில்லை.
கடந்த 2007 முதல் ஒவ்வொரு அணியும் பங்கேற்ற போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் கணக்கிடப்படுகிறது. இதன்படி தற்போது தென் ஆபிரிக்கா (18 போட்டி, 127 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் வென்ற அவுஸ்ரேலியா (26 போட்டி, 125 புள்ளி) இரண்டாம் இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் கூடுதலாக இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி (28 போட்டி, 125 புள்ளி) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.