அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தண்டனை புள்ளியால் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளின் பின் டென்னிஸ் களம் திரும்பிய பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 13 ஆவது நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் 2 ஆம் நிலை வீரõங்கனை செரீனா வில்லியம்ஸுடன் கிம்கிளிஜ்ஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் தேவைப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் எல்லை கோட்டைத் தாண்டி விளையாடியதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த செரீனா நடுவரை மோசமான வார்த்தையால் திட்டினார். இதனைத் தொடந்து நடுவர் இது குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட அவர் தண்டனை புள்ளியாக கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு ஒரு புள்ளியை வழங்க செரீனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். இதன்போது செரீனா தன்னை கொலைசெய்து விடுவதாக குறிப்பிட்டார் என்று நடுவர் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே இந்த போட்டியின் முதல் சுற்றின்போது செரீனா ஆடுகளத்தில் மோசமாக நடந்துகொண்டார். இதற்காக அவர் நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளான நிலையிலேயே மீண்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிரோலின் வொஸ்னிக்கை சந்திக்கவுள்ளார்.