அமெரிக்க கண்டத்திற்கு செல்லும் விமானங்களை திரவ வெடிகுண்டுகள் மூலம் வெடிக்கச்செய்ய முயன்ற குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற நீதிபதி, இவர்களில் ஒருவர் ஆயுட்காலம் முழுமையும் சிறைக்குள்ளேயே கழிக்கவேண்டி நேரலாம் என்று கூறினார்.
இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமமான ஒரு அட்டூழியத்தை நடத்த இவர்கள் சதி செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.
இவர்களின் சதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப்பயணிகள் கொண்டு செல்லத்தக்க திரவங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சதிச்செயல் அல்கயீதாவால் வழி நடத்தப்பட்டதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.