அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பகிரங்க டெனிஸ் சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ கைப்பற்றினார்.
நியூயார்க்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். ஃபெடரர் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தால் தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்திருப்பார்.
இதற்கு முன்னர் யு.எஸ். ஓபனில் தான் பங்கேற்ற 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருந்தார் ஃபெடரர். ஆனால் 41-வது ஆட்டத்தில் அவர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மேலும் இதற்கு முன்னர் ஃபெடரர் – டெல் போட்ரோ மோதிய 6 ஆட்டங்களில் ஃபெடரரே வெற்றி பெற்றிருந்தார்.
அனுபவமிக்க வீரராக இருந்தும் டெல் போட்ரோவின் அற்புதமான ஆட்டத்தின் முன் ஃபெடரர் தோல்வி கண்டார்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறி வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ.