கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் 138 ஓட்டங்கள் சேர்த்தார். அவர் 42 ஓட்டம் எட்டிய போது இந்த மைதானத்தில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டெண்டுல்கர் இங்கு 27 ஒரு நாள் போடியில் ஆடி 4 சதம் உட்பட 1096 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜயசூரிய, அத்தபத்து, அரவிந்த டி சில்வா, ஜயவர்தன, சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர். அந்த வரிசையில் டெண்டுல்கர் 6 வது இடம் பெற்றுள்ளார்.
* டெண்டுல்கர் நேற்று முன்தினம் அடித்தது அவரது 44 வது ஒரு நாள் போட்டி சதமாகும். இலங்கைக்கு எதிரான 8வது சதமாகும்.
* இலங்கை அணி கப்டன் சங்கக்கார வித்தியாசமான முறையில் (ஹிட் விக்கெட்) ஆட்டம் இழந்தார். அவர் ஆர். பி. சிங் வீசிய பந்தை முன்னால் இறங்கி அடிக்க முற்பட்டார். அப்போது பேட் கையில் இருந்து நழுவி தலைக்கு மேல் பின்னோக்கி சென்று ஸ்டம்பில் விழுந்தது.
* இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 1998 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கர் – அகாய் நிடாஹாஸ் கோப்பைக்கான 3 நாடுகள் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்று இருந்தது.
அதன் பிறகு இந்திய அணி, இலங்கையுடன் 7 இறுதிப் போட்டிகளில் மோதியதில் 5ல் தோல்வி கண்டுள்ளது. 2002ம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் கோப்பையின் இரண்டு இறுதிப் போட்டியும் மழையால் ரத்துச் செய்யப்பட்டது. இதனால் இரு அணிகள் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
* முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற பிறகு இந்திய அணி கப்டன் டோனி கூறுகையில், ‘இந்த வெற்றியை சமீபத்தில் மறைந்த இந்திய கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் துங்கர்பூருக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார்.