ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட்ட பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
உள்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இருவர் மற்றும் இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு தூதுவர்கள் மேலும் தூதுவராக பதவி வகித்துவிட்டு சென்றவர்கள் என பலர் இந்த சதித்திட்டத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம் என்று ஸ்ரீலங்கா சதந்திர கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களை முன்வைத்து சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதியை அந்த பதவியிலிருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனவே நாட்டைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்