எந்த வகையிலாவது நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றி நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி முன்னெடுக்கப்படுகிறது. ராஜதந்திர சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இருவருடன் இணைந்து எதிர்க் கட்சியில் உள்ள இரு அரசியல்வாதிகள் இவ்வாறு சதி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பிரிவினைவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது வேறு உருவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2005 ல் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யவும் அவரை தோற்கடிக்கவும் சதி செய்யப்பட்டது.
இந்த வருட முதற்பகுதியில் ஜனாதிபதியை கொலை செய்தாவது பிரபாகரனை காப்பாற்ற சதி முன்னெடுக்கப்பட்டது. இந்த சதிகள் யாவும் வெற்றிகரமாக தோற்கடிக் கப்பட்டன. ஆனால் இன்று பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டி இலங்கைக்கு எதிராக சதி செய்யப்படுகிறது. ஐ.தே.க. தலைவர் ஒருவரும் எந்தக் கட்சிக்கும் இல்லாத அரசியல்வாதி ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் மீது சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தவும் அதனூடாக நாட்டின் தலைமைத்துவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மீது அவதூறு ஏற்படுத்தவே செனல்-4 தொலைக்காட்சியினூடாக சதி செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரியது. இந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐ.தே.க. அதுகுறித்து எதுவுமே வாய்திறக்காது உள்ளது.
செனல்-4 சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படியே எந்த ஐ.தே.க. உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் தெரிவித்தனர்.
புலிகள் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தி வந்த போது மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்தது. ஆனால் இந்தக் கொள்வனவில் மோசடி இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி மிக் கொள்வனவை தடுக்க முயற்சி செய்தன.
மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்வதால் புலிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலே எதிர்க் கட்சியிலுள்ள சிலர் செயற்கையான முறையில் சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள புலி முக்கியஸ்தர் ஒருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இதனுடன் தொடர்புடையோரின் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
செனல்-4 தொலைக்காட்சியின் பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக பிரித்தானியாவில் இலங்கையர் போராட்டம் நடத்தினர். இதற்கு அங்குள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் உரிய பிரசாரத்தை வழங்கினர்.
அத்தகைய ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜனக அலஹப்பெருமவுக்கு ஐரோப்பாவில் இயங்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவரை அச்சுறுத்தி 139 தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. இதில் 26 அழைப்புகள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பதையும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் ஐ.தே.க. தலைவர் முயற்சி செய்கிறார்.
அரசியல் ரீதியில் விவாதிக்கப்படுவதையும் விமர்சிப்பதையும் முகம்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுத்து ஆட்சி பீடமேற முயல வேண்டாமென ஐ.தே.க. தலைவரை கோருகிறோம் என்றார்.