அரசாங்க சேவை வெற்றிடங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
அரச சேவை ஆணைக்குழுவிடமிருந்து அதற்கான அதிகாரங்கள் பொது நிர்வாக அமைச்சுக்குக்கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள கிராம சேவகர் வெற்றிடங்கள், நிர்வாக சேவை மற்றும் முகாமைத்துவ இணைந்த சேவையிலுள்ள வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புதல், இடமாற்றங்கள், சேவைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வரு கிறது.
இந்த வகையில் முகாமைத்துவ இணைந்த சேவைக்கு 3,000 பேரையும் கிராம சேவகர்களாக 1,000 பேரையும் இலங்கை நிர்வாக சேவைக்கு 300 பேரையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கான பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் இம்முறை செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி உள்ளகப் பரீட்சைகள், பரீட்சைகள் திணைக் களத்தினாலன்றி அமைச்சின் மூலம் இலங்கை நிர்வாக சேவை கல்வி நிறுவனத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலண்டர் ஒன்றை தயார்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முகாமைத்துவ சேவை தொடர்பில் கரு த்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம, அரச நிர்வாக சேவையிலிருந்து மாகாண சபைகளுக்குச் சென்றுள்ளவர்கள் அங்கு ஐந்து வருடங்களை நிறைவு செய்ததும் அவர்கள் மீள நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளத்தக்கதாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரச சேவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நட த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவ் விடயத்தில் நடைமுறையிலுள்ள முறைமைகள் கட்டாயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
கிராம சேவகர்களை நியமிக்கும் விடயத்தில் சமுர்த்தி அதிகாரிகள் தத்தமது பகுதிகளில் தம்மை கிராம சேவகர்களாக நியமிக்கக் கோருகின்றனர். எனினும் இதுவிடயத் தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.