சிறையி லடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக விடுதலையான ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி தெரிவித்தார். விடுதலையான பின்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை முன்நடார் அல் செய்தி நடத்தினார்.
இதன் போது தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கினார். குளிர்ந்த நீரில் அமிழ்த்து வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கையால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகவியலாளர் விளக்கினார். விடுதலையான பின்னரும் கூட தனக்கு அச்சுறுத்தல்கள் தொடரும் அபாயமுள்ளது.
அமெரிக்காவின் உளவுத்துறை அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக என்மீது போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது. எனவே எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாது சிறையில் என்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை எனக்குத் தெரியும்.
தேவையேற்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடுவேன். ஈராக்கில் அவர்கள் (அமெரிக்க இராணுவம்) பொதுமக்களைக் கொலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது மன உணர்வை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது செருப்பை வீசிய முன்நடார் அல் செய்தி மூன்று வருட சிறைத் தண்டனைக்குள்ளானார் பின்னர் ஒருவருடமாக இத்தண்டனை குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக ஒன்பது மாதங்களின் பின் நேற்று இவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.