பெல்ஜியம் வீராங்கனை 26 வயதான கிம்கிலிஸ்டர்ஸ் குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் டென்னிசுக்கு திரும்பினார். நீண்ட நாள் டென்னிசை விட்டு விலகியதால் அவர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய அமெரிக்க ஒபனை வென்று சாதனை படைத்த அவருக்கு தரவரிசையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் டாப் 10க்குள் நுழைவதை அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.
ரஷியாவின் தினரா சபீனா முதலிடத்திலும், அமெரிக்காவின் செரீனா, வீனஸ் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 74வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
ஆண்கள் தர வரிசையில் பெடரர் தொடர்ந்து நம்பர் – 01 அரியணையில் உள்ளார். 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் அன்டி முர்ரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்க பகிரங்கத்தில் 4வது சுற்றிலேயே வெளியேறியதால் முர்ரேவுக்கு இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது- 3வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளார். அமெரிக்க பகிரங்கத்தில் பட்டத்தை வென்ற ஆர்ஜன்டினாவின் டெல்போட்ரோ ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பெற்றுள்ளார்.
அமெரிக்க பகிரங்க ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயசின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 8 வது இடத்திலேயே நீடிக்கிறார். அவருடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி 6வது இடத்தில் உள்ளார்.